
வைர வியாபாரியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற மெஹுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை பெற அவரது வழக்குரைஞர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், மெஹுல் சோக்ஸியை நாடு கடத்திக் கொண்டு வரும் நடைமுறை என்பது இந்திய அதிகாரிகளுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், நீதிமன்றத்தில் அவர் உடல்நிலையைக் காரணம் காட்டி நாடு கடத்துவதை எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இதே மருத்துவக் காரணங்களைக் காட்டி, அவர் விரைவில் பிணை பெறலாம் என்றும், 65 வயதாகும் தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு பிணை பெற தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அவரது வழக்குரைஞர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மெஹுல் சோக்ஸி, ஆன்டிகுவாவில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மெஹுல் சோக்ஸி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவரால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் வழக்குரைஞர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.