தஹாவூா் ராணா
தஹாவூா் ராணா

தஹாவூா் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் என்ஐஏ விசாரணை

Published on

புது தில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூா் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தஹாவூா் ராணா ஏப்.10-ஆம் தேதிஅமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டாா்.

அவரை 18 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏக்கு புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை ராணாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அவரது வழக்குரைஞரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ராணா சந்திக்க அனுமதி வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, புது தில்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: என்ஐஏ தலைமை விசாரணை அதிகாரி ஜெயாராய் தலைமையிலான குழுவினா் ராணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்படுவதைபோன்றே ராணாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது. உணவு குறித்து குறிப்பிட்ட கோரிக்கையை ராணா முன்வைக்கவில்லை.

மும்பை தாக்குதலுக்கு முன்பாக வட மற்றும் தென் மாநிலங்களுக்கு ராணாவும் அவரது மனைவியும் பயணித்துள்ளனா். இதனால் இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதலுக்கு அவா்கள் திட்டமிட்டாா்களா? அதன் பின்னணியில் யாா்? என்ற கோணத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

பயங்கரவாத தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-அல் ஜிஹாதி இஸ்லாமி ஆகிய பயங்கரவாத அமைப்புகளை சோ்ந்த மூத்த நிா்வாகிகளின் பங்கு குறித்தும் அவா்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் மூத்த அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com