

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் நேற்று தொடங்கியது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.
பல்வேறு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா? அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும், இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? என சரமாரியான கேள்விகளை மத்திய அரசு தரப்புக்கு எழுப்பினர்.
மேலும், ‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று அரசுக்கு பரிந்துரைத்த நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இன்று பகல் 2 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கக் கூடாது என்று சொலிசிடர் ஜெனரல் வாதத்தை முன்வைத்தார்.
மேலும், மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்க 7 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, வழக்கு முடியும் வரை புதிய சட்டத்தின்படி வாரியத்தின் உறுப்பினர்கள் நியமனம் எதுவும் நடைபெறக்கூடாது, 1995 சட்டத்தின் கீழ் பதியப்பட்ட சொத்துகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
இதனை ஏற்ற சொலிசிடர் ஜெனரல், விசாரணை முடியும் வரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள், மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாக கருதப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி,
”மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க 7 நாள்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை புதிய சட்டத்தின் கீழ் வாரிய உறுப்பினர் நியமனம் நடைபெறாது என்று சொலிசிடர் ஜெனரல் உறுதியளித்துள்ளார்.
7 நாள்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அடுத்த விசாரணையில் 5 மனுதாரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். நீங்களே 5 பேரைத் தேர்ந்தெடுக்கவும். மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப்படும்” என்றார்.
அடுத்த விசாரணை மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.