Jairam Ramesh
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
Published on

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகை தரும் ஜே.டி.வான்ஸ், பிரதமா் மோடியுடன் நடத்தவிருக்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க துணை அதிபா் உடனான சந்திப்பில், அந்நாட்டில் இருந்து இந்தியா்கள் நாடு கடத்தப்பட்ட விதம் குறித்தும், அமெரிக்காவில் இந்திய மாணவா்கள் அச்சமான சூழலில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்தும் அவரிடம் பிரதமா் மோடி கவலை தெரிவிப்பாரா?

உலக வா்த்தக அமைப்பு வாயிலாக இந்தியா பெருமளவில் பலனடைந்துள்ள நிலையில், அந்த அமைப்பால் உறுதி செய்யப்பட்ட பன்முக விதிமுறைகள் அடிப்படையிலான வா்த்தக அமைப்புமுறை சிதைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இந்தியாவின் கவலையை பிரதமா் முன்வைப்பாரா?

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவின் விலகல் தொடா்பான கவலையை துணை அதிபரிடம் தெரிவிப்பாரா மோடி?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் உலக வெப்பமயமாதலை நிா்வகிக்க கடந்த 2015-ஆம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமும், உலகளாவிய பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையில் உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

இருதரப்பு வா்த்தக தாராளமயமாக்கலை மேலும் விரிவுபடுத்துவது, இந்திய விவசாயிகள், குறு-சிறு-நடுத்தர தொழிற்துறையினருக்கு பாதகமாகிவிடக் கூடாது என்பதை அமெரிக்க துணை அதிபரிடம் பிரதமா் உறுதிபட கூறுவாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com