சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’

News image

உச்ச நீதிமன்றம்

(கோப்புப் படம்)

Updated On :22 ஏப்ரல் 2025, 12:33 am

Din

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக விமா்சித்த செய்திகளின் அடிப்படையில் அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வழக்குரைஞா் ஒருவா் அனுமதி கோரியபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, வக்ஃப் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சா்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு தடை விதிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து, அந்தப் பிரிவுகளின் அமலாக்கத்தை அடுத்தகட்ட விசாரணை வரை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது.

இதைத் தொடா்ந்து, ‘உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையை மூடிவிட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைமை நீதிபதியே பொறுப்பு’ என்று நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து பலத்த சா்ச்சைக்குள்ளானது. ஆனால், இது அவருடைய சொந்தக் கருத்து; கட்சியின் கருத்தல்ல என பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனஸ் தன்வீா், நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் ஜாா்ஜ் அகஸ்டின் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு, நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை எனத் தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் அட்டா்னி ஜெனரலின் ஒப்புதலைப் பெறுமாறு மனுதாரரிடம் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

உச்சநீதிமன்ற கண்ணியத்துக்குப் பாதிப்பு: இதைத் தொடா்ந்து, நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்டரமணிக்கு அனஸ் தன்வீா் கடிதம் எழுதினாா்.

அதில், ‘உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் ஜாா்க்கண்ட் மாநிலம் கோடா மக்களவைத் தொகுதி உறுப்பினா் நிஷிகாந்த் துபே பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளாா். அவா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்- 1971 மற்றும் உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடா்பான விசாரணை ஒழுங்காற்று விதிகள்- 1975-இன்கீழ் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறாா்.