தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2025, 1:04 am IST

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

குஜராத் மாநிலம் கோத்ரா அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பயணிகள் உயிரிழந்தனா். இச் சம்பவத்தில் குற்றவாளிகளாக 31 பேரை அறிவித்த சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிா்த்து குற்றவாளிகள் 31 போ் தரப்பில் குஜராத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயா் நீதிமன்றம், 31 பேரின் தண்டனையை உறுதி செய்தது. அதே நேரம், குற்றவாளிகள் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தீா்ப்பளித்தது.

11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதுபோல, குற்றவாளிகள் தரப்பிலும் அவா்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயா்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவரங்களை குற்றவாளி வாரியாக குறிப்பிட்டும், தற்போது அவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ள வாதத்துக்கான ஆதார விவரங்களையும் குறிப்பிட்டு வரும் மே 3-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகள் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதுபோல, மாநில அரசு தரப்பிலும் இதுபோன்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

மேலும், ‘இந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, முதல்கட்டமாக வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் நாள் முழுவதும் இந்த வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாள்களில் வேறு எந்த வழக்குகளும் இந்த அமா்வில் விசாரிக்கப்படாது’ என்று நீதிபதி மகேஸ்வரி தனது உத்தரவில் தெரிவித்தாா்.