இந்தியப் போர்க்கப்பலின் ஏவுகணைச் சோதனை வெற்றி!
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத் வெற்றிகரமாக ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையின் சோதனையானது வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை தரப்பில் கூறியதாவது, ‘ஏவுகணைகளை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்த உள்நாட்டு வழிகாட்டப்பட்ட ஐ.என்.எஸ். சூரத் எனும் போர்க்கப்பலானது தனது இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது; இது கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த முயற்சியின் வெற்றியானது இந்தியாவின் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை நிரூபிப்பதுடன் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவுக்கான நாட்டின் உறுதியை பரைசாற்றுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 26 பேர் படுகொலைச் செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானுடனான உறவுகள் முறிக்கப்பட்டு எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.
அதன் ஒரு நடவடிக்கையாக, இந்தியாவின் கடற்படை உள்ளிட்ட மூப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த சூழலில் இந்தச் சோதனையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
