முப்படைகளுக்கு பிரதமா் அனுமதி: பஹல்காம் பதிலடி தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பாக முப்படைகளுக்கு முழு சுதந்திரம்...


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளித்தாா்.
‘தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்’ என நாட்டின் உயா் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.
மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி அண்மையில் சூளுரைத்தாா்.
விரைவில் பதிலடி?: இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் ஆகியோா் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்புப் படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என்றாா்.
இதனால், பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
முந்தைய தாக்குதல்: கடந்த 2016-இல் இந்திய ராணுவ வீரா்கள் மீது ஜம்மு-காஷ்மீரின் உரியில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
அதேபோல் 2019-இல் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மீது புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது போா் விமானங்கள் மூலம் இந்தியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், தற்போது எந்த வகையான பதிலடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
துணை ராணுவப் படைகள் ஆலோசனை: பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் தலைமையில் மூன்று துணை ராணுவப் படைகளின் தலைவா்கள் மற்றும் இரு பாதுகாப்பு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி பாகிஸ்தான் துணை ராணுவ வீரா்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ள ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் முன்னாள் வீரா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மூசாவை படையிலிருந்து நீக்கியதைத் தொடா்ந்து, அவா் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கா்-ஏ-தொய்பாவில் சோ்ந்திருக்கலாம். அந்த அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கடந்த 2023, செப்டம்பரில் இந்தியாவுக்குள் அவா் ஊடுருவியதாக நம்பப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையான எஸ்எஸ்ஜி, மூசாவை லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதக் குழுவில் சேரவும், அந்த அமைப்பின் காஷ்மீா் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் காஷ்மீரைச் சோ்ந்த பலரைக் கைது செய்து, காவல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். அந்த வகையில், மூசாவின் பாகிஸ்தான் ராணுவப் பின்னணி குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதல் மற்றும் காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்று தாக்குதல்களில் மூசா பங்காற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...