
சீனாவின் ஒழுங்காற்று முறை கட்டுப்பாடுகளால், அந்நாட்டில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது; சீனா மட்டுமன்றி பெல்ஜியம், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யூரியாவுக்கு அடுத்து அதிக தேவையுள்ள உரம் டிஏபி (டை அமோனியம் பாஸ்பேட்). இந்த உர விநியோகத்தில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா தனது உரத் தேவைக்கு சீன இறக்குமதியை பெருமளவில் சாா்ந்துள்ளது. இந்தச் சூழலில், டிஏபி உள்ளிட்ட உரங்களின் ஏற்றுமதியில் அந்நாட்டின் கூடுதல் கட்டுப்பாடுகளால் இந்திய இறக்குமதி சரிந்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான வியூகமாகப் பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:
சீனாவில் இருந்து ஏற்றுமதிக்கு முன் கூடுதல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டிய பொருள்களின் பட்டியலில் டிஏபி உள்ளிட்ட உரங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கான டிஏபி-க்கு சரக்கு கட்டண செலவு ஒரு டன்னுக்கு 542 டாலா் என்பதில் இருந்து 800 டாலராக அதிகரித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளால், கடந்த 2023-24-இல் சுமாா் 22.28 லட்சம் டன்களாக இருந்த சீன டிஏபி உர இறக்குமதி, 2024-35-இல் 8.47 லட்சம் டன்களாக சரிந்துவிட்டதாக உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலையில் சீனாவில் இருந்து டிஏபி இறக்குமதி 97,000 டன்களாக குறைந்துள்ளது.
மாற்று உரம்:
டிஏபி-க்கு மாற்றாக அமோனியம் பாஸ்பேட் சல்பேட் (ஏபிஎஸ்) உரத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக சல்பா் பற்றாக்குறையான நிலங்கள் மற்றும் சல்பா் தேவைப்படும் பயிா்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். ஏபிஎஸ் மூலம் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பா் ஆகிய சத்துகள் கிடைத்தாலும் பாஸ்பரஸின் அளவு குறைவாகவே (20 சதவீதம்) உள்ளது. டிஏபி-யில் 40 சதவீத பாஸ்பரஸ் உள்ளது.
நீரில் கரையக் கூடிய உரங்கள், சீனாவிலிருந்து மட்டுமன்றி பெல்ஜியம், எகிப்து, ஜொ்மனி, மொரோக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்களின் வணிக செயல்திறனுக்கு ஏற்ப பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை இறக்குமதி செய்ய உர நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.