
உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்:
"இன்று உலகம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடந்து செல்லும் சூழலில் உள்ளது. நிலைத்தன்மையற்ற நிலைமை எங்கும் உள்ளது. அப்படியிருக்கும் சூழலில், ஒவ்வொரு தேசமும் தங்கள் சொந்த நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவின் நலனுக்காக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நமது விவசாயிகள், தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் நலன் - இவையனைத்துமே நமக்கு முக்கியம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் அரசு தம்மால் இயன்ற ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருகிறது".
"இந்தியாவின் குடிமக்களாக நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. இது மோடிக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.
இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்ற யாரெல்லாம் விரும்புகிறாரோ, அது யாராயினும்சரி, எந்த அரசியல் கட்சியாகவும் இருக்கலாம், தலைவராகவும் இருக்கலாம், அவர்கள் நாட்டின் நலனைக் கருதி பேச வேண்டும். அதனுடன் மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த அவர்கள் வலியுறுத்த வேண்டும்.
நாம் எதையாவது வாங்க நினைத்தால், அப்போது ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்: ஒரு இந்தியனின் வியர்வையால் தயாரான பொருள்களை நம் வாங்கப்போகிறோம் என்பதே அது.
இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட எதுவானாலும்சரி, இந்திய மக்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தி உருவான எதுவானாலும், இந்திய மக்களின் வியர்வையால் விளைந்த எதுவானாலும், அவையெல்லாம் நமக்கு ‘சுதேசியே’. ‘உள்ளூருக்கு முக்கியத்துவம்’ என்ற தாரக மந்திரத்தை பின்பற்ற நாம் தயாராக வேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.