
தன்னுடைய மறைந்த தாயின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.
வாயைப் பிளந்துகொண்டு அதிர்ச்சியில் கண்களை மூடாமல் பலரும் சமூக வலைத்தளத்தில் இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் ஷாருக் கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.7,438 கோடி. இதை விட, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும் தொகை 15 ஆயிரம் மடங்கு அதிகமாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாய் காயத்ரி தேவியின் வங்கிக் கணக்கை, அவரது 20 வயது மகன் தீபக் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு, வங்கிக் கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
அதாவது இந்தத் தொகைக்கு மொத்தம் 37 இலக்கங்கள் என்பதால், அவர் அதனை எண்ணிப் பார்த்து உண்மையான தொகையைக் கண்டுபிடிக்கவே பல மணி நேரம் ஆனதாம். அப்போதும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனதும், தனது நண்பர்களுக்கு அந்தத் தொகையை அனுப்பி இது எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
உடனடியாக மறுநாள் காலை, அவர் வங்கிக்குச் சென்று, தகவலைக் காட்ட, வங்கி அதிகாரிகளோ அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். பிறகு, வங்கிக் கணக்கைப் பார்த்து, மிகப்பெரிய தொகை ஒன்று, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதை ஆராய்ந்த வருமான வரித்துறை, அந்தக் கணக்கை முடக்கியிருப்பதாக, வங்கி அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இது குறித்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், தீபக்கின் நண்பர்களும், உறவினர்களும் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கேட்டறிந்து வருகிறார்கள். கைமீறிச் சென்ற நிலைமையை விவரிக்க முடியாமல் அவர் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகளோ, இந்தத் தொகை எங்கிருந்து வந்தது என்பது கண்டறியப்பட்ட பிறகே அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.