
அமித் ஷாவுக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து ராகுல் காந்தி வந்தடைந்த நீதிமன்றத்திலும், அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜூன் 2ஆம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மனுத் தாக்கல் செய்தார்.
ஜூன் 10ஆம் தேதி ராகுல்காந்தி நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜராக முடியாது என்று காங்கிரஸ் எம்பியின் வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதியை வழங்குமாறு கோரினார். உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
2018 ஆம் ஆண்டு சாய்பாசாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், ராகுல் காந்தியின் அறிக்கைகள் அவதூறானவை என்றும் அமித்ஷாவின் அந்தஸ்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே கூறப்பட்டவை என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான காந்தி, மூத்த பழங்குடியினத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சிபு சோரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்ட் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.