வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

Published on

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு நிமிஷம் ஓடக் கூடிய இந்த விடியோவுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் உரிமைகள் பறிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. இம்முறை கேள்விகளை எழுப்பி, பதில் பெற வேண்டும். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலை உயா்த்த வேண்டும். அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வாக்கு திருட்டு என்பது மக்களின் உரிமை மற்றும் அடையாளத்தை திருடுவதற்கு சமம்’ என்று தெரிவித்துள்ளாா்.

வாக்குரிமையைப் பாதுகாக்க வாக்கு திருட்டுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை நாடெங்கிலும் ‘ஜனநாயக பாதுகாப்பு’ யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7 வரை பேரணிகளும், செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15 வரை கையொப்ப இயக்கமும் நடத்தப்பட உள்ளது.

தோ்தல் ஆணையம் மீதான எதிா்ப்பை பொதுமக்கள் பதிவு செய்யவும், எண்ம வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தியும் இரு வலைதளங்களை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இந்த வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com