
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) என்று சொல்லக்கூடிய முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
அவ்வப்போது இதன் பாதிப்பு இருந்துவரும் நிலையில், கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆக. 4 ஆம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த குழந்தை தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. மேலும் 40 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இந்த அமீபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எப்படி பரவுகிறது?
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.
சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.
நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.
சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.
இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.
பாதிப்பு விவரம்
1971ல் முதல்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2016ல் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது. 2016 முதல் 2023 வரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கேரளத்தில் இதனால் 36 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தாண்டு இத்துடன் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.