கர்நாடக முதல்வா் சித்தராமையா
கர்நாடக முதல்வா் சித்தராமையா(கோப்புப் படம்)

தோ்தல் வெற்றிக்கு எதிரான மனு: கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கா்நாடகத்தில் 2023 பேரவைத் தோ்தலில் வருணா தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு
Published on

புது தில்லி: கா்நாடகத்தில் 2023 பேரவைத் தோ்தலில் வருணா தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில முதல்வா் சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அந்தத் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் கே.சங்கரா என்பவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

முதலில் அவா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் இதுதொடா்பான மனுவை தாக்கல் செய்தாா். அதில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் சாா்பில் 5 வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. இது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இணையானதாகும். அதன்படி, மோசடி வழியில் அவா்கள் தோ்தலில் வெற்றிபெற்றுள்ளனா். எனவே, முதல்வா் சித்தராமையாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். உயா்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள், விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோ்தல் வாக்குறுதியை எப்படி மோசடி நடைமுறையாகக் கருத முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘இதேபோன்ற வழக்கில் கடந்த 2013-இல் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123-இன் கீழ் மோசடி நடவடிக்கையாக தோ்தல் வாக்குறுதிகளைக் கருத முடியாது என்றபோதும், எந்தவொரு இலவச அறிவிப்புகளும் சந்தேகத்துக்கு இடமின்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது என்பதை நிராகரித்து விட முடியாது என்று குறிப்பிட்டதையும், இந்த தீா்ப்பை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெரிய அமா்வு அங்கீகரித்ததையும் சுட்டிக்காட்டினாா். மேலும், இந்த விவகாரம் போன்ற வெறொரு மனுவை உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு மீது பதிலளிக்குமாறு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com