இந்திய தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்ப வேண்டியிருப்பது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதத்தை தொடக்கிவைத்து காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து இங்கு பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தம், தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
நாட்டின் பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் எஸ்ஐஆர் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் சட்டரீதியான எந்த நியாயமும் இல்லை. எஸ்ஐஆர் நடத்துவதற்கான காரணங்களை எழுத்துப் பூர்வமாக நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவிஎம் இயந்திரங்கள் மூலம் மோசடி செய்யப்படுகின்றன என்று நான் சொல்லவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் மோசடி செய்ய முடியும் என்ற அச்சம் இருக்கிறது. இன்று வரை எனது கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை, இவிஎம்களின் சோர்ஸ் கோடு (source code) யாரிடம் உள்ளது?” எனத் தெரிவித்தார்.
மொத்தம் 10 மணிநேரம் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.