

புதுச்சேரி பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், என்.ஆர். காங்கிரஸையும் முதல்வர் ரங்கசாமியையும் விமர்சிக்காதது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய போதே அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் திமுக மற்றும் பாஜகவை மட்டுமே விமர்சித்து வருகிறார். காங்கிரஸ், அதிமுக குறித்து பெரியளவிலான விமர்சனங்களை விஜய் முன்வைத்தது இல்லை.
இதனால், தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் முதல்முறையாக பிரசாரத்தில் பங்கேற்ற விஜய், எவ்வித அரசியலை முன்னெடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. புதுவையின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி குறித்து விமர்சனங்கள் முன்வைப்பாரா என்ற கேள்வி உலாவியது.
ஏனெனில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் முதல்வராக உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியும் விஜய்யும் நெருங்கிய உறவை பேணுபவர்களாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு சென்று ரங்கசாமி அவரை சந்தித்தது அப்போது அரசியலில் பேசுபொருளாக இருந்தது.
இதனிடையே, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்தும் என்.ஆர். காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, தற்போது தவெகவில் உள்ளார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பிரசாரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுத்த புதுவை முதல்வருக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும், என்.ஆர். காங்கிரஸை நேரடியாக குறிப்பிட்டு எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்காத விஜய், புதுவை வளர்ச்சிக்காகவும், மாநில அந்தஸ்து கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் மத்திய பாஜக அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனால், வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸும் தவெகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.