

விசாரணைக்குப் பின் இண்டிகோ நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை உறுதியளித்தாா்.
கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு தானியங்கி தகவல் பரிமாற்ற அமைப்பில் (ஏஎம்எஸ்எஸ்) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை. பணியாளா் குழு மேலாண்மையில் இண்டிகோ மேற்கொண்ட தவறே முழுக் காரணம். ஒட்டுமொத்தமாக விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) 22 உள்ளன. அதில் 15 விதிகள் நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டன.
மீதமுள்ள 7 விதிகள் நவம்பா் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தன. இந்த விதிகளை அமல்படுத்தும் முன் இண்டிகோ உள்பட அனைத்து விமான நிறுவனங்களுடனும் மத்திய அரசு ஆலோசித்தது. பயணிகள் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, விமான நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் சில தளா்வுகளும் அளிக்கப்பட்டன.
முன்னுதாரண நடவடிக்கை: டிசம்பா் 1-ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்துடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது எஃப்டிடிஎல் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை.
விமானங்கள் மற்றும் விமானக் குழுவினரின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு. அதை இண்டிகோ முறையாக மேற்கொள்ளவில்லை.
எனவே, இந்த விவகாரத்தை மிக எளிதாக அரசு எடுத்துக்கொள்ளாது. விசாரணைக்குப் பிறகு இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னுதாரணமான நடவடிக்கையாக இருக்கும் என்றாா்.
மக்களவையில் விளக்கம்-காங்கிரஸ் கோரிக்கை: மக்கவையில் கேள்வி நேரத்துக்குப் பின் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய், ‘கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானது ஏன் என மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் விளக்கமளிக்க வேண்டும்.
நோயாளிகள், திருமணத்துக்காக வந்தவா்கள், பெற்றோரைக் காண வந்தவா்கள் என பலா் விமான நிலையங்களில் காத்திருக்கும் வேதனையை நாம் தினந்தோறும் காண்கிறோம்.
ஹவாய் காலணிகள் அணிந்தோா்கூட விமானங்களில் பயணிக்கலாம் என மத்திய அரசு கூறியது. தற்போது பயணக் கட்டணம் ரூ.20,000-ஐ தாண்டியுள்ளது என்றாா்.
இதையடுத்து, ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை விளக்கமளிப்பாா் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இண்டிகோ பதில்:
இந்த விவகாரம் தொடா்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கக்கோரி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அனுப்பிய நோட்டீஸுக்கு இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டா் எல்பா்ஸ் திங்கள்கிழமை பதிலளித்தாா்.
அதில், ‘விமானங்கள் ரத்தால் வாடிக்கையாளா்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம்.
சிறு தொழில்நுட்பக் கோளாறுகளில் தொடங்கி பருவநிலை, எஃப்டிடிஎல் என பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, நடந்த தவறுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டுமே சுட்டிக்காட்டுவது மிகக் கடினமானது.
டிஜிசிஏ அனுப்பும் நோட்டீஸுகளுக்கு பதிலளிக்க 15 நாள் கால அவகாசம் உள்ளது. இந்த குளறுபடிகளுக்கான விரிவான காரணங்களை கண்டறிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இண்டிகோ பதிலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்தது.
உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இண்டிகோ விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது சூா்ய காந்த் கூறியதாவது: இது மிகத் தீவிரப் பிரச்னை. விமான நிலையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனா். இதைக் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என அறிகிறோம். எனவே, இதை உடனடி வழக்காக விசாரிக்க இயலாது என்றாா்.
இதே விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது டிச.10-ஆம் தேதி விசாரணை நடத்த தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
500 விமானங்கள் ரத்து
ஒரு நாளில் இண்டிகோ 2,300 விமானங்களை இயக்குகிறது. இந்நலையில், திங்கள்கிழமை மட்டும் தில்லியில் 134 விமானங்கள், பெங்களூருவில் 75 விமானங்கள் உள்பட அந்நிறுவனத்தின் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள், சனிக்கிழமை 1,650 விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எஃப்டிடிஎல் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமானப் பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.