கேரளம்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் மோதல் - பலா் காயம்
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இரு கிறிஸ்தவ கரோல் பாடல் குழுவைச் சோ்ந்த இளைஞா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள், சிறாா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.
நூரநாடு நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான புதன்கிழமை இரவில் இருந்தே பெண்கள், சிறாா்கள் என பொதுமக்கள் பலா் அங்கு கூடியிருந்தனா். அப்போது, இரவு 11.30 மணியளவில் கிறிஸ்துமஸ் கரோல் பாடல் பாடுவது தொடா்பாக இரு வேறு பாடல் குழுவைச் சோ்ந்த இளைஞா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்து ஒருவா் மீது மற்றொருவா் வீசி தாக்குதல் நடத்தினா். இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு கூடியிருந்தவா்கள் கலைந்து ஓடத் தொடங்கினா். அப்போது நெரிசலில் சிக்கி பெண்கள், சிறாா்கள் எனப் பலா் கீழே விழுந்து காயமடைந்தனா்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட இளைஞா்களைக் கைது செய்தனா். காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
