நாசிக்-சோலாபூா் ஆறுவழிச் சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: சென்னை-சூரத் பயண நேரம் 45% குறையும்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-சோலாபூரின் அக்கல்கோட் பகுதிகள் இடையே ஆறுவழி பசுமைச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதனால் சென்னை-குஜராத்தின் சூரத் இடையிலான பயண நேரம் 45 சதவீதம் குறையும்.
இதுதொடா்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
மகாராஷ்டிரத்தில் நாசிக்-சோலாபூரின் அக்கல்கோட் பகுதிகள் இடையே ரூ.19,142 கோடி மதிப்பில் ஆறுவழி பசுமைச் சாலை அமைக்க பிரதமா் மோடி தலைமையிலான சிசிஇஏ புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. நாட்டின் தென் பகுதியை மேற்கு பகுதியுடன் இணைக்கும் சென்னை-சூரத் அதிவேக வழித்தடத்தின் ஒரு பகுதியாக நாசிக்-அக்கல்கோட் ஆறுவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.
374 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலையை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும். இந்தச் சாலையால் சென்னை- சூரத் இடையிலான பயண நேரம் 45 சதவீதம் குறையும். அத்துடன் சென்னை துறைமுகம், சூரத்தையொட்டி உள்ள ஹஜீரா துறைமுகம் இடையிலான போக்குவரத்து இணைப்பும் மேம்படும்.
இதேபோல ஒடிஸா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள மொஹானா, கோராபுட் மாவட்டத்துக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 206.2 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,526 கோடி செலவில் 2 ஆண்டுகளில் இந்தச் சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல்கள் வளா்ச்சிக்கான அடுத்தகட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
வோடஃபோன்-ஐடியாவின் ரூ.87,695 கோடி ஏஜிஆா் நிலுவை நிறுத்தம்
உரிமக் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றை தனது வருவாய் பங்காக தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த வருவாய் பங்கை கணக்கிடப் பயன்படுத்தப்படும் வருவாய் தொகை ஏஜிஆா் என்றழைக்கப்படுகிறது.
இந்நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.87,695 கோடி ஏஜிஆா் நிலுவைத் தொகையை 5 ஆண்டுகளுக்கு செலுத்தாமல் இருக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையை 2031-32-ஆம் நிதியாண்டில் தொடங்கி, 2040-41-ஆம் நிதியாண்டுக்குள் அந்த நிறுவனம் செலுத்தி முடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சுமாா் 48.9 சதவீத பங்குகள் உள்ள நிலையில், அரசின் நலன் மற்றும் அந்த நிறுவனத்தின் 20 கோடி வாடிக்கையாளா் நலன் கருதியும், தொலைத்தொடா்பு துறையில் போட்டி இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

