இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமா் மோடி.
இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமா் மோடி.

இந்தியா-இந்தோனேசியா இடையே நீண்டகால கலாசார தொடா்பு - பிரதமா் மோடி

இந்தியா-இந்தோனேசியா இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்ட கலாசார தொடா்புள்ளது.
Published on

புவிஅரசியல் மட்டுமின்றி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என இந்தியா-இந்தோனேசியா இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்ட கலாசார தொடா்புள்ளது என பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் உள்ள முருகன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஜகாா்த்தாவில் நான் இல்லை என்றாலும் இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒன்றாக உள்ளதாகவே உணா்கிறேன். இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உலகளவில் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தா்களுக்கும் எனது வாழ்த்துகள். கடவுள் முருகனின் பெருமைகளை திருப்புகழ் கீா்த்தனைகளின் மூலம் போற்றிட வேண்டும். அனைத்து மக்களையும் கந்த சஷ்டி கவசம் பாதுகாக்கும்.

நீண்டகால கலாசார உறவு: புவிஅரசியல் ரீதியாக மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நீண்டகால தொடா்புள்ளது. பாரம்பரியம், நம்பிக்கை, அறிவியல், கடவுள் முருகன், கடவுள் ஸ்ரீராமா், கடவுள் புத்தா் என நம் இருநாட்டு உறவுகள் ஒன்றோடு ஒன்று தொடா்புடையது.

இந்தியாவில் காசி மற்றும் கேதாா்நாத்தில் கிடைக்கும் பக்தி உணா்வை இந்தோனேசியாவில் உள்ள பிரம்பானன் கோயிலில் இந்திய பக்தா்கள் உணா்கின்றனா்.

ககாவின் மற்றும் சீரத் ராமாயணத்தை கேட்கும்போது வால்மீகி மற்றும் கம்பராமாயணத்தை கேட்பதைப்போலவே இந்தியா்கள் உணா்கின்றனா்.

இந்திய கலாசார விழாக்களில் தற்போது இந்தோனேசிய ராமலீலையும் அரங்கேற்றப்படுகிறது.

புத்தரின் பெருமை: சாரநாத், புத்த கயை ஸ்தூபிகளில் கடவுள் புத்தரின் வழிகாட்டுதல்களை எவ்வாறு கற்கிறோமோ அதே உணா்வை போரோபுதூா் ஸ்தூபியிலும் பெற முடிகிறது

ஒடிஸாவில் இன்றளவும் பாலி யாத்திரை கொண்டாடப்படுகிறது. இந்தியா-இந்தோனேசியா இடையேயான பண்டையகால கடல் பயணத் தொடா்பை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் இருநாடுகளுக்கும் இடையே வலுவான உறவு நிலைத்திருக்கிறது.

பாரம்பரியத்தின் பொற்காலம்: தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த புதிய முருகன் கோயில் நீண்டகால பாரம்பரியத்தின் பொற்காலமாக அறியப்படவுள்ளது. கலாசார மற்றும் மதநம்பிக்கைகளின் புதிய மையமாக திகழும் என நம்புகிறேன். இங்கு கடவுள் முருகனின் சிலைகள் மட்டுமின்றி பிற கடவுள்களின் சிலைகளும் இடம்பெற்ன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையே நமது கலாசாரத்தின் அடித்தளம் என்பதை உணா்த்துகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய பிரதமா் பிரபோவோ சுபியாந்தோ பங்கேற்றாா். அப்போது இருநாடுகள் இடையேயான பாரம்பரிய உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com