அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுங்கச்சாவடி.(கோப்புப்படம்)
சுங்கச்சாவடி.(கோப்புப்படம்)
Updated on
1 min read

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கிய தகவலைக் கொண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் கழிவறைகளைக் கட்டுவதைப் பொறுத்தவரை, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் கழிவறை உள்ளிட்டவை தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்தால் அது பற்றி புகார் அளிக்க ராஜமார்க் யாத்ரா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒன் செயலியில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள 1,300 கழிவறைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுங்கச்சாவடிகளை நடத்தவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமைப்புகளிடம் கழிவறைகளின் தூய்மை தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. உரிய கழிவறை வசதிகளை செய்து தராத அமைப்புகளிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அவ்வகையில் இதுவரை ரூ. 46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 40-60 கி.மீ. இடைவெளிக்கு ஒன்று என்ற அடிப்படையில் கழிவறைகள் உள்ளிட்ட சாலையோர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 58 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் மத்திய பிரதேசம் (48), குஜராத் (45), உத்தர பிரதேசம் (44), பஞ்சாப் (35), ஆந்திர பிரதேசம் (34) என்ற எண்ணிக்கையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று சிவராஜ் சிங் சௌஹான் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com