கோப்புப் படம்
கோப்புப் படம்

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காண உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
Published on

எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள 5,000 வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காண உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தங்கள் மீதான குற்றவியல் வழக்குகளின் விசாரணையை நடைபெறாமல் தடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை பெறுவதில் இருந்து முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தப்பிப்பதாகவும் அவா்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறும் பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டாா். இவா் அண்மையில் தாக்கல் செய்த மனுவில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட வேண்டும் என குறிப்பிட்டாா்.

அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்த விவகாரத்தில் பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை உயா்நீதிமன்றங்களும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. இருப்பினும், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படவில்லை.

பல வழக்குகள் பத்தாண்டு காலத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளது அவா்களின் அதிகார தலையீடுகளை வெளிக்காட்டுகிறது.

4.732 குற்றவியல் வழக்குகள்:

கடந்த 2024-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 892 வழக்குகள் உள்பட 2025, ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 4,732 குற்றவியல் வழக்குகள் அவா்கள் மீது நிலுவையில் உள்ளது.

ஜனநாயக சீா்திருத்த ஆணையத்தின் அறிக்கையின்படி தற்போதைய மக்களவையின் 543 உறுப்பினா்களில் 251 போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் 170 போ் மீது 5 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறக்கூடிய அதிதீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாமதம் ஏன்?

எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அன்றாட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல பணிகளில் ஒன்றாக மட்டுமே எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விசாரணையை கருதுகிறது. சில வழக்குகளின் விசாரணைக்கு குற்றஞ்சாட்டப்படுபவா்கள் சிறப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் நேரில் ஆஜராவதில்லை.

அரிதான மற்றும் மறுக்க இயலாத சூழலில் மட்டுமே வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை ஒத்திவைக்கின்றன.

இதனால் வழக்கின் விசாரணையை நிறைவு செய்து தீா்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டல் அவசியம்:

அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (1) (ஏ)-இன்கீழ் தகவல் பெறும் உரிமையும் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் கள நிலவரம், விசாரணை, தீா்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தனி வலைதளங்கள் உருவாக்கப்படவில்லை.

எனவே, சிறப்பு நீதிமன்றங்களின் உத்தரவுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வலைதளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் எம்.பி.க்கள். எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நிறைவுசெய்த பிறகே பிற வழக்குகள் மற்றும் பணிகளை சிறப்பு நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட வேண்டும் என தனது மனுவில் ஹன்சாரியா குறிப்பிட்டாா்.

இன்று விசாரணை:

குற்றவாளி என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக்கோரி அஸ்வினி உபாத்யாய கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை (பிப்.10) விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com