
மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கும்பமேளாவுக்குச் செல்லும் பக்தர்கள் இரண்டு நாள்கள் வரை வாகனங்களிலேயே தங்கும் அளவுக்கு அப்பகுதியைச் சுற்றிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகன நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறை உணவளித்துச் செல்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை 40 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர்.
தற்போது அந்த இரு விஷேச நாள்களையும் தாண்டி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்டுள்ளனர். அதிக வாகனங்கள் வருவதால், பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மத்திய பிரதேசத்திலேயே தடுக்கப்படுவதாகவும், பலரும் மத்திய பிரதேசத்திலேயே தங்கிவிடுவதாகிவும் கூறப்படுகிறது.
பிரயாக்ராஜ் பகுதிக்கு முன்பே 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்துக் காவல்துறையினர் தடுமாறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மத்தியப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசலில் காத்திருக்கும் மக்களுக்கு காவல் துறையினர் உணவளித்து வருகின்றனர். கார்கள், வேன்கள், பேருந்துகளில் காத்திருக்கும் பக்தர்கள், காவல் துறை அளிக்கும் உணவை வரிசையில் நின்று வாங்கிச் சென்று உண்கின்றனர்.
வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கியுள்ளதால், திரும்பச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலில் சிக்கியுள்ளவர்கள் உணவின்றி சிரமத்தை சந்திக்கக்கூடாது என்ற நோக்கத்தில் காவல் துறை இதனைச் செய்து வருகிறது.
இதையும் படிக்க | சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!