தமிழ்நாட்டு மாணவர்கள் பல மொழிகளைக் கற்பதில் என்ன தவறு? தர்மேந்திர பிரதான் கேள்வி!
தமிழ்நாட்டு மாணவர்கள் பல மொழிகளைக் கற்பதில் என்ன தவறு இருக்கின்றது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி நிறுவப்பட்டு 126 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆண்டு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்திராகக் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், “மாணவர்களிடையே போட்டியை உருவாக்கவும் சமமான சூழ்நிலையை உருவாக்கவும் நாம் பொதுவான ஒரு தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது புதிய லட்சியத்திற்கான பொதுத் தளமாகும்.
நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தமிழ் மொழி நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவன் கல்வியில் பன்மொழிகளைக் கற்றுக் கொண்டால் என்ன தவறு? அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாகக் கூட இருக்கலாம். அந்த மாணவர்கள் மீது ஹிந்தியையோ மற்ற எந்த மொழியையோ திணிக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் இதில் அரசியல் செய்கின்றனர். ஆனால், இந்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த உறுதியாக உள்ளது. அதில் சில நிபந்தனைகளும் உள்ளன” என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.