மொழியை முன்னிறுத்தி கிழக்கு பாகிஸ்தானில் (1952), தமிழ்நாட்டில் (1965), தென் ஆப்பிரிக்க சோவெட்டாவில் (Soweto) (1976) மாணவர்கள் எழுச்சியுற்றுத் திரண்டு முன்னெடுத்த போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகளாயின. வரலாற்றில் நீடித்த விளைவுகளுக்கும் இப்போராட்டங்கள் வித்திட்டன என்பது உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் வகுப்பறைகளிலிருந்து ஒன்றிணைந்து அமைதி அலையாக வெளிப்போந்த மாணவர்களது 'புளோ அவுட்ஸ்' (Blow Outs) எனக் குறிக்கப்படும் ‘'வெளிநடப்புகள்' (Walk Outs), அமெரிக்காவின் முதல், மிகப்பெரிய, நகர்ப்புற இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியாக வரலாற்றில் பொதிந்து, ஒரு வெற்றிகரமான மொழிப் போராட்டச் சான்றாகியுள்ளது. மொழிக்காக எண்ணற்ற உயிர்ப்பலிகள் கண்ட கிழக்கு பாகிஸ்தான், தமிழ்நாடு, தென் ஆப்பிரிக்க சோவெட்டா, போராட்டங்கள் போலில்லாமல், கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர்கள் தொடங்கி, டென்வர், டெக்சாஸ் பிரதேசங்களுக்கும் பரவிய மாணவர் போராட்டம், உயிர்ப்பலிகள் ஏதுமின்றி, ஒரு சில காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே எதிர்கொண்டு, பெருவெற்றியை அறுவடை செய்தது குறிப்பிட்டுரைக்க உரியது.