தில்லி புதிய முதல்வர் ரேகா குப்தா: இன்று பதவியேற்பு விழா

தில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேகா குப்தா...
ரேகா குப்தா...
Published on
Updated on
2 min read

நமது நிருபர்

தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார். மேலும், தில்லியில் முதல்வர் பதவி வகித்த பாஜக தலைவர்களான மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது பாஜக முதல்வராகும் பெருமையையும் இவர் பெறுகிறார்.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்கிறது.

தேர்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியானபோதும், புதிய முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்பதால் பல கட்ட ஆலோசனைகளை பாஜக மேலிடம் கடந்த ஒரு வாரமாக நடத்தியது.

தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப். 23-ஆம் தேதி காலாவதியாகவிருக்கும் நிலையில், பாஜக சட்டப்பேரவைக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த கட்சியின் மேலிடப் பார்வையாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பாஜக தலைமை நியமித்தது. அவரது முன்னிலையில் புதன்கிழமை மாலையில் பாஜக சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் ஓம் பிரகாஷ் தன்கரும் கலந்துகொண்டார்.

அதில், தில்லி ஷாலிமார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதல்வராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ரேகா குப்தாவின் பெயரை மும்முறை எம்எல்ஏவான விஜேந்தர் குப்தா, இரண்டு முறை எம்.பி. ஆகவும் தற்போது புது தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்தி எம்எல்ஏ ஆகியுள்ள பர்வேஷ் வர்மா, சதீஷ் உபாத்யாய ஆகியோர் முன்மொழிந்தனர். அதை மற்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து, ரேகா குப்தா பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று பதவியேற்பு விழா: இதையடுத்து, தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை அவரது ராஜ் நிவாஸ் மாளிகையில் ரேகா குப்தா கட்சியின் மேலிடத் தலைவர்கள் மற்றும் மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறவுள்ள பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை அவர்களிடம் துணைநிலை ஆளுநர் விளக்கினார்.

தனக்கு கட்சி மேலிடம் வழங்கிய இந்த மிகப்பெரிய வாய்ப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ரேகா குப்தா நன்றி தெரிவித்துக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்கள், பொறுப்பு முதல்வர் அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

முதல்வராகும் "முதல் முறை' எம்எல்ஏ

ரேகா குப்தா (50) தனது அரசியல் வாழ்வை மாணவர் அரசியலில் தொடங்கி படிப்படியாக முன்னேறியுள்ளார். தௌலத் ராம் கல்லூரியில் படித்தபோது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்த இவர், 1994-95 ஆண்டில் அக்கல்லூரியின் மாணவர் சங்கச் செயலராகவும், 1995-96 ஆண்டில் தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலராகவும், 1996 - 97 ஆண்டில் பல்கலை. மாணவர் சங்கத் தலைவராகவும் ஆனார்.

2003 - 2004 வரை தில்லி பாஜக இளைஞரணிச் செயலர், 2004 - 2006 வரை கட்சியின் தேசிய செயலர் பதவி வகித்த இவர், 2007-இல் வடக்கு பீதம்புராவின் கவுன்சிலரானார். 2007 - 2009 வரை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், 2009-இல் தில்லி பாஜக மகளிர் அணி பொதுச் செயலராகவும் இருந்தார். 2010, மார்ச் மாதம் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். 2023, பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராயிடம் தில்லி மேயர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா குமாரியை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் ரேகா குப்தா. இவருக்கு தொழிலதிபர் மணீஷ் குப்தா என்ற கணவரும், மகன் நிகுஞ்ச், மகள் ஹர்ஷிதா குப்தாவும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com