அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?- அமெரிக்க அதிபா் டிரம்ப் கேள்வி

இந்தியாவிடம் அதிக அளவில் பணம் உள்ளது; அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வாக்குப் பதிவை அதிகரிக்க அமெரிக்கா ஏன் 2.1 கோடி டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை வழங்க வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பினாா்.

இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவியை, தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அந்நாட்டு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தது.

இது தொடா்பான நிா்வாக உத்தரவுகளில் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்ட அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா். மேலும், அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘இந்தியாவில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் 2.1 கோடி டாலா் கொடுக்கிறது. இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா ஆகும். இந்தியாவில் வரி மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவால் அங்கு வா்த்தகம் செய்ய முடியவில்லை.

இந்தியா மீதும், பிரதமா் நரேந்திர மோடி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அமெரிக்க மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தீவிர வெளிப்படைத்தன்மை தேவை. இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிக்க 2.1 கோடி டாலா்களை வழங்குகிறோம். அதேநேரம், அமெரிக்க வாக்குப் பதிவு விகிதம் குறித்த நிலவரம் என்ன?’ என்று குறிப்பிட்டாா்.

அமெரிக்க அரசு நிா்வாகத்தை மேம்படுத்தி, வீண் செலவுகள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், அமெரிக்க அரசு நிதியுதவி திட்டத்தின்கீழ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக செலவிடப்பட இருந்த நிதியுதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அண்மையில் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபா் டிரம்ப், தொழிலதிபா் எலான் மஸ்க் ஆகியோரைச் சந்தித்தாா். இதைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது. இதேபோல நேபாளம், வங்கதேசம், மொசாம்பிக், கம்போடியா, சொ்பியா, மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் டிஓஜிஇ ரத்து செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com