
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தி நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று தனது எக்ஸ் தளப் பதிவில், “நரேந்திர மோடி, நீங்கள் சீனாவுக்கு சிவந்த கண்களைக் காட்டுவதற்கு பதிலாக அவர்களுக்கு செவ்வணக்கம் வைப்பதை கொள்கையாகக் கடைபிடிக்கிறீர்கள்.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டு ஆகியவற்றை மோடி அரசு ஆபத்தில் நிறுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களை அமைத்து குடியேறத் தொடங்கியுள்ளது. முன்னதாக, சீனா நமது எல்லையில் இதேபோறு 628 கிராமங்களை குடியேற்றியதாக செய்திகள் வெளியாகின.
மோடி அரசு 'துடிப்பான கிராமங்கள்’ திட்டத்தை எல்லைப் பகுதியில் அதிகமாக ஊக்குவித்துள்ளது. மேலும், அவை நாடாளுமன்றத்தில் அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது.
ஆனால் உண்மை என்னவென்றால், 'துடிப்பான கிராமங்கள்’ திட்டத்தின் 90% நிதி கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்படவில்லை.
இந்தத் திட்டம் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டது. இதற்கென ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடி நிதியில், ரூ.509 கோடி மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், மோடி அரசு அதற்கு எந்த நிதியும் வழங்கவில்லை” என்று குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், “கடந்த டிசம்பர் 2024 இல் பிரம்மபுத்திரா நதியின் மீது 'உலகின் மிகப்பெரிய அணை' கட்டும் திட்டத்தை சீனா அறிவித்தது. இது நமது தேசிய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். பிரம்மபுத்திரா நதி இந்தியாவின் 30% நன்னீர் வளத்தைக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் 2022 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்த பதிலின்படி, "மார்ச் 2021 இல், சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்டு பிரம்மபுத்திரா நதியின் பகுதிகளில் நீர்மின் திட்டங்களை அமைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது" என உங்கள் அரசு கூறியது.
இதன்படி 2021 முதல் மோடி அரசாங்கம் இந்த விஷயத்தை அறிந்திருந்தது. ஆனால் தற்போது வரை உங்கள் அரசு முற்றிலும் அமைதியாக இருந்து வருகிறது.
இதன்மூலம் ஒன்றுமட்டும் தெளிவாகிறது. உங்கள் அரசாங்கம் மக்கள் தொடர்பு நடவடிக்கை மற்றும் பொய்யான விளம்பரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அல்ல” என்று கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.