வயநாடு நிவாரண நிதி: பிரதமர் மோடிக்கு பிரியங்கா கடிதம்!

வயநாடு நிவாரண நிதிக்கு உடனடி நடவடிக்கைக் கோரி பிரதமருக்கு பிரியங்கா கடிதம்..
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மத்திய அரசின் நிவாரண நிதியை மானியமாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதற்குண்டான நிவாரண நிதியை வழக்க மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வயநாடு நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் தாமதமாவதாகக் குற்றஞ்சாட்டி சூரல்மலை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வயநாடு நிதியுதவியை இழப்பீடாகக் கருதி மக்களுக்கு உதவ வேண்டும் என்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மோடிக்கு எழுதிய கடிதத்தில்,

வயநாடு மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து தங்களை மீட்டெடுக்க அனைத்து சாத்தியமான உதவிகளையும் ஆதரவையும் கோரி வருகின்றனர்.

வயநாடு மக்களவை எம்.பி.யாக, எனது தொகுதியில் உள்ள சூரல்மாலா மற்றும் முண்டக்காய் மக்களின் அவலநிலையை உங்களுக்குத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

நிலச்சரிவு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகும், அவர்கள் தங்கள் வாழ்வை மீண்டும் மீட்டெடுக்க முடியாத நிலையில் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது மனவேதனை அளிக்கிறது.

கடந்த ஜூலையில் நிகழ்ந்த பேரழிவில் 298-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வயநாடு மாவட்டத்திற்கு ஆதரவு நிச்சயம் தேவைப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு இல்லாமல் இந்தப் பேரழிவைச் சமாளிக்க முடியாது. ஆனால், சரியான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் எதுவும் இதுவரை கிடைக்காமல் உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்ட நிலையிலும், கணிசமான நிதியுதவி மக்களுக்குக் கிடைப்பது தொடர்ந்து தாமதமாகி வருகின்றது. மக்களின் அவல நிலையை இரக்கத்துடன் கருத்தில் கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

நிவாரண நிதியை மானியத் தொகையாக மாற்றி அதை செயல்படுத்துவதற்கான காலத்தை நீட்டிக்குமாறு மனமார்ந்த வேண்டுகோள் அளிப்பதாக அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com