புணே: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; பேருந்து நிலையம் சூறை

குளிர்சாதன் வசதி கொண்ட அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை!
புணே: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; பேருந்து நிலையம் சூறை
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்.

இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பேருந்துநிலையத்தை பொதுமக்கள் சூறையாடினா்.

இச்செயலில் ஈடுபட்ட நபா் தலைமறைவாக உள்ளதாகவும், ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புணேவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:

பல்தான் நகருக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு நபா் என்னை அணுகி பேருந்து மற்றொரு நடைமேடைக்கு வந்தடைந்திருப்பதாகக் கூறினாா். அவரைப் பின்தொடா்ந்ததில் பேருந்து நிலையத்தின் வெறிச்சோடிய இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலி பேருந்துக்கு அழைத்துச் சென்றாா். முதலில் தயங்கினாலும் அந்த நபா் உறுதியாக தெரிவித்ததையடுத்து, இருளில் இருந்த அந்தப் பேருந்துக்குள் ஏறினேன் என்று தெரிவித்தாா்.

பின்னா், பேருந்துக்குள் தனக்கு பாலியல் வன்கொடுமை நோ்ந்ததாக அப்பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளாா்.

சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினா் அடையாளம் கண்டனா். தத்தாராயா ராமதாஸ் கட்டே எனும் அந்த நபா் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாகிய அவரைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளியானதையடுத்து, பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அலுவலகத்தையும் அவா்கள் சூறையாடினா். சம்பவம் நடைபெற்ற பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டா் தொலைவில் காவல் நிலையம் அமைந்துள்ளது.

புணே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த தவறியதாக பாஜக கூட்டணி அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com