ஜக்ஜித் சிங் தல்லேவால்
ஜக்ஜித் சிங் தல்லேவால்Express

41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
Published on

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

41வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் (70) கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இன்றுடன் 41வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றனர்.

கனெளரியில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கிஷான் மகாபஞ்சாயத் கூட்டத்தில் 11 நிமிடங்களுக்கு உரையாற்றினார். அதில் பேசிய பிறகு தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியுள்ளது.

அதன் பிறகு அவருக்கு வாந்தி மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரையாற்றிய பிறகு அவர் மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுவரப்படும்போது ரத்த அழுத்தம் குறைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தல்லேவாலைத் தொடர்ந்து கண்காணித்துவரும் மருத்துவர் அவதார் சிங் தில்லான் பேசியதாவது,

கடும் பனி நிலவுவதால் உரையாற்ற வேண்டாம் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தினோம். ஆனால், அவர் அதனையும் மீறி 11 நிமிடங்களுக்கு உரையாற்றினார். அதன் பிறகு கூடாரத்துக்கு அழைத்துவரப்பட்ட பிறகு தண்ணீர் கொடுத்தோம். ஆனால், அவர் ஒவ்வாமையால் வெளியேற்றிவிட்டார்.

அவரால் உறங்க முடியவில்லை. அவரின் ரத்த அழுத்தம் 108/73 ஆக குறைந்துள்ளது. சுவாச விகிதம் 17ஆகவும், இதயத் துடிப்பு 73 ஆகவும் உள்ளது. திரவ மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் மறுத்துவிட்டார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com