மிகப் பெரிய திட்டங்கள் காத்திருக்கின்றன: இஸ்ரோ புதிய தலைவர் தகவல்

"​இஸ்ரோ அமைப்பு வெற்​றி​க​ர​மான பாதை​யில் நடை​போ​டு​கி​றது; மிக முக்​கி​யத் திட்டங்​க​ளில் சந்​தி​ர​யான்-4, ககன்​யான் திட்டங்​கள் குறிப்​பி​டத்​தக்​கவை'
மிகப் பெரிய திட்டங்கள் காத்திருக்கின்றன: இஸ்ரோ புதிய தலைவர் தகவல்
Published on
Updated on
1 min read

"இஸ்ரோ அமைப்பு வெற்றிகரமான பாதையில் நடைபோடுகிறது; மிக முக்கியத் திட்டங்களில் சந்திரயான்-4, ககன்யான் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை' என்று இஸ்ரோவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள வி.நாராயணன் புதன்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) அவர் பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விண்வெளித் துறைச் செயலராக, இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல பெரிய தலைவர்களால் வழிநடத்தப்பட்ட இந்த அமைப்பில் எனக்கும் ஒரு பங்களிப்பு கிடைத்திருப்பதை பெரும் அதிருஷ்டமாகவே கருதுகிறேன்.

இஸ்ரோ தலைவராக நான் அறிவிக்கப்பட்ட தகவல் முதலில் எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்தது. அனைத்தையும் பிரதமரே முடிவு செய்கிறார். அத்துடன் தற்போதைய இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தும் நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலைத் தெரிவித்தார்.

இஸ்ரோவில் அடுத்து மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து கேட்கிறீர்கள். வெற்றிகரமான பாதையில் சென்று கொண்டிருக்கும் இஸ்ரோவுக்கு இது முக்கிய தருணம் என்பதை அனைவரும் அறிவர். டிச. 30}ஆம் தேதி இஸ்ரோ தனது "ஸ்பேடெக்ஸ்' ஆய்வைத் தொடங்கியது. இதில் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்புப் பணிகள் விரைவில் நடைபெறும்.

ககன்யான் திட்டம் இஸ்ரோ முன்பு உள்ள மிக முக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் செலுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "என்விஎஸ் 02' ராக்கெட் ஏவும் பணி ஸ்ரீஹரிகோட்டாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் ஜிஎஸ்எல்வி லாஞ்சர் மூலம் இது ஏவப்படும்.

அத்துடன் அமெரிக்காவின் வர்த்தக செயற்கைக்கோளை இஸ்ரோவின் மாக் 3 லாஞ்சர் மூலம் செலுத்தும் முயற்சியும், ககன்யான் திட்டத்தில் ராக்கெட் ஒன்றிணைக்கும் பணியும் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்று வருகிறது.

"சந்திரயான் 3' திட்டத்தின் மூலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதை அனைவரும் அறிவர்.

அடுத்தகட்டமாக சந்திரயான் 4 திட்டத்தின் மூலம் நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வரும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன.

இந்தியாவுக்கென்று விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விண்வெளி நிலையம் ஐந்து பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அதில் முதற்கட்ட பணி 2028}இல் தொடங்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.