
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜன.10 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சர்வதரிசன டிக்கெட் வாங்க திருப்பதியில் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்றுமுன்தினம் (ஜன. 8) உயிரிழந்தனர்.
மேலும், பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உலகப் புகழ் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உறுதியளித்தபடி, திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முக்கோடி ஏகாதசி அன்று வைகுண்ட துவார தரிசனத்தை ஏற்பாடு செய்து வைத்தனர். பின்னர், பக்தர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்தது.
காயமடைந்த 32 பக்தர்கள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்திலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் திருப்பதி மாவட்ட ஆட்சியர் எஸ்.வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.