சந்தையிலிருந்து 4 டன் மிளகாய் தூளை திரும்பப் பெறும் பதஞ்சலி: அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி கலப்பு எதிரொலி
அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி கலப்பு ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ)உத்தரவின் அடிப்படையில் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்ட 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிளகாய் தூள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி கலப்பு அளவுக்கு உச்ச வரம்பை எஃப்எஸ்எஸ்ஏஐ நிா்ணயம் செய்துள்ளது. அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவன சிவப்பு மிளகாய் தூளில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, ‘எஃப்எஸ்எஸ்ஏஐ தரத்தை பூா்த்தி செய்யாத ‘ஏஜேடி2400012’ என்ற தொகுப்பு (பேட்ச்) எண்ணுடன் பாக்கெட் செய்யப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ள 200 கிராம் அளவுடைய மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டது.
அதனடிப்படையில், சிவப்பு மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நுகா்வோா், அந்த பாக்கெட்டுகளை வாங்கிய கடைகளிலேயே திரும்பக்கொடுத்து முழுப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.