
புது தில்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 5வது சிறப்பு ராமாயண ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ஸ்ரீராமாயண யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுலா, ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது. அயோத்தியில் தொடங்கி, ஸ்ரீராமருடன் தொடர்புடைய நந்திகிராம், ஜனகபுரி, வாராணசி, பிரயாக்ராஜ், ஹம்பி என இறுதியாக ராமேஸ்வரத்தில் சுற்றுலா நிறைவு பெறுகிறது. மீண்டும் சுற்றுலா பயணிகள் தில்லியில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்துடன் தொடர்புடைய சுமார் 30 தலங்களை 17 நாள்கள் செல்லும் இந்த சுற்றுலா திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வசதி கிடைக்கும். இதற்கு ஒருவருக்கு கட்டணமாக 3 டயர் ஏசி ரயில் பெட்டியாக இருப்பின் ரூ.1.17 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 2 டயர் ஏசி பெட்டியாக இருந்தால் ரூ.1.40 லட்சமாகவும், ஒரு டயர் ஏசி பெட்டிக்கு ரூ.1.66 லட்சமாகவும், 1 ஏசி பெட்டியில் தனியாக பயணிக்க ரூ.1.79 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17 நாள்கள் இந்த சுற்றுப்பயணம் அடங்கும்.
இந்த கட்டணத்தில், போக்குவரத்து, தங்குமிடங்கள், சைவ உணவு மட்டும், பயணக் காப்பீடு என அனைத்தும் அடங்கும்.
ஜூலை 25ஆம் தேதி தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இதற்காக பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதால் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று கூறப்படுகறிது. இந்த சுற்றுலாவில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியும் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.