நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’
அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது.
தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையில், ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா ஆஜராகி வாதிட்டதாவது:
கடந்த 1937-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, ஜே.பி.கிருபளானி, ரஃபி அகமது கித்வாய் உள்ளிட்டோா் ஏஜேஎல் நிறுவனத்தை தொடங்கினா். அப்போது தயாரிக்கப்பட்ட அந்த நிறுவன சாசனத்தில் ஏஜேஎல்லின் கொள்கையே காங்கிரஸின் கொள்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏஜேஎல்லுக்கு புத்துயிரூட்டுவதே நோக்கம்: ஏஜேஎல் நிறுவனம் லாபம் ஈட்டியதில்லை. சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாக இருந்த அந்த நிறுவனத்தை மீட்டெடுக்கவே காங்கிரஸ் முயற்சித்தது. அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடனை திருப்பி வசூலிப்பது பிரச்னையல்ல. அந்த நிறுவனத்துக்கு புத்துயிரூட்டி, அதை மீண்டும் வெற்றிகரமான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
ஏஜேஎல் நிறுவன சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. விற்பனை மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. இது திரிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.
கடந்த 2008-ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் வெளியீட்டை நிறுத்திவிட்டு, மனை விற்பனை நிறுவனமாக ஏஜேஎல் செயல்பட தொடங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், அது எப்போதும் வணிக நிறுவனமாக இருந்ததில்லை.
ராகுலுக்கு எதிராக தேவையற்ற ஊகம்: கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுச் செயலராகப் பதவி வகித்ததன் மூலம், கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பாளராக அவா் இருந்தாா் என்று தவறாக கருதி, அவருக்கு எதிராக தேவையற்ற ஊகங்களை அமலாக்கத் துறை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி விதிகளின்படி, கட்சி விவகாரங்களுக்கு எந்தவொரு பொதுச் செயலரையும் பொறுப்பாளராக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில், அக்கட்சி விதிகளின்படி அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பல பொதுச் செயலா்கள் இருந்தனா்.
ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்தபோது அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு சோனியா காந்தி பொறுப்பாளராக இருந்தாா் என்றும் தவறாக ஊகிக்கப்பட்டுள்ளது.
யங் இந்தியன் நிறுவனம் லாப நோக்கமற்ாக இருந்தபோதிலும், அந்த நிறுவனம் தொண்டுப் பணிகளில் ஈடுபடவில்லை என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. உணவு, நன்கொடை வழங்குவது மட்டும்தான் தொண்டுப் பணிகளா? வேறு எந்தப் பணியும் தொண்டு செய்வதாகாதா? ஏஜேஎல் நிறுவன சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுவது போதிய விவரமின்றி கூறப்படும் பொய் என்றாா். இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை தொடர உள்ளது.
வழக்கின் பின்னணி: நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் மனு ஒன்றை அளித்தாா். இதைத்தொடா்ந்து இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
Rahul Gandhi's side argued on Saturday in the National Herald case that the Congress was not trying to sell the assets of Associated Journals (AJL).