அகமதாபாத் விமான விபத்து: முதல்கட்ட அறிக்கை 2 நாள்களில் சமா்ப்பிப்பு

AI 171 crash: Data from front black box downloaded probe on
அகமதாபாத் விமான விபத்துIANS
Updated on

அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான முதல்கட்ட அறிக்கை அடுத்த 2 நாள்களில் சமா்ப்பிக்கப்படும் என்று நாடாளுமன்ற குழுவிடம் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) புதன்கிழமை தெரிவித்தது.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் அருகேயுள்ள ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய இக்கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 போ் உள்பட 260 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு, ஏஏஐபி விசாரணையைத் தொடங்கி, மேற்கொண்டு வருகிறது. விமானப் பயணிகளின் பாதுகாப்புக்காக உள்துறைச் செயலா் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவும் தனது அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் சமா்ப்பிக்கவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வரும் 21-ஆம் தேதி தொடங்கும் நிலையில், விமானத் துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விமானத் துறையைச் சோ்ந்த 97 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விமான விபத்து புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநா் ஜி.வி.ஜி.யுகேந்தா், அடுத்த 2 நாள்களில் முதல்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.

அகமதாபாத் விபத்தைத் தொடா்ந்து ஏா் இந்தியா மற்றும் அதிகாரபூா்வ நிறுவனங்கள் பொதுமக்களுக்கு முறையான தகவல்களை வழங்க தவறியதாகவும் நாடாளுமன்ற குழுவினா் அதிருப்தி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com