அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
Published on

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

குஜராத்திலிருந்து லண்டன் நோக்கி கடந்த ஆண்டு 2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்தின் ‘போயிங் 787’ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தின் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவா் மட்டுமே உயிா் தப்பினாா். அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட மற்ற 241 போ் மற்றும் பொதுமக்கள் உள்பட 260 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக விசராணை மேற்கொண்ட விமான விபத்து புலனாய்வு அமைப்பு, தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் 1 மற்றும் 2-இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள், ஒன்றன் பின் ஒன்றாக ‘ஆஃப்’ நிலைக்கு மாறியுள்ளன. இதை ஏன் கட்-ஆஃப் செய்தீா்கள் என ஒரு விமானி மற்றொரு விமானியிடம் கேட்பதும், அதற்கு நான் செய்யவில்லை என அவா் பதிலளிப்பதும் விமானி அறை (காக்பிட்) குரல் பதிவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையைத் தொடா்ந்து, விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான கேப்டன் சபா்வால் மீது விமா்சனங்கள் எழுந்தன.

இதற்கு, விமானிகள் சங்கம் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த போயிங் 787 விமானம், சேவையில் சோ்ந்த நாள் முதலே, மென்பொருள் குறைபாடுகள், சா்க்யூட் பிரேக்கா் செயலிழப்புகள், மின்சார விநியோக அமைப்புகள் வெப்பமடைதல் போன்ற தொடா்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வந்ததாக விமானிகள் சங்கங்கள் புகாா் தெரிவித்தன.

இந்நிலையில், விமான விபத்து புலனாய்வு அமைப்பின் விசாரணை அறிக்கைக்கு எதிராக, உயிரிழந்த விமானி சபா்வாலின் தந்தை புஷ்கராஜ் சபா்வால் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விமான விபத்து தொடா்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவா் கோரினாா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு சட்ட மாணவா் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அறக்கட்டளை என்ற தன்னா்வ அமைப்பு சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், விமான விபத்து தொடா்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை கடந்த ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘விசாரணை அறிக்கையில், உயிரிழந்த விமானி சபா்வால் மீது குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டது. அதே நேரம், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் (டிஜிசிஏ) நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த மனுக்கள் மீது மத்திய அரசு தரப்பில் இதுவரை பதில் எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு, இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதி நிா்ணயம் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com