
ஹிமாசல பிரதேசத்தில் சிம்லா, சிர்மோர் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலனிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தின் உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சிம்லா, சிர்மோர், கின்னவுர், குலு, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலன் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கூடம் ஆகிய இடங்களுக்கு ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இன்று (ஜூலை 9) மிரட்டல் மின்னஞ்சல்களை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.
அந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை, என காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் ஒரே விதமான வாக்கியங்களுடன் வந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பெயரால் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால், அந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய அடையாளம் தெரியாத மர்ம நபர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பெயரில் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு நேற்று (ஜூலை 8) வந்த போலியான வெடிகுண்டு மிரட்டலானது அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.