
புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. இதில், விமானிகளின் தவறே விமான விபத்துக்குக் காரணம் என்பது போன்ற உள்ளடக்கம் இடம்பெற்றிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இந்த அறிக்கையை முற்றிலும் புறக்கணிப்பதாகவும் இந்திய விமானிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த 241 போ் உள்பட 260 போ் பலியாகினர்.
முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், விமானிகள் பேசிக்கொண்டதாக ஆடியோவில் பதிவான சில தகவல்களும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய விமானிகள் சங்கத் தலைவர் சாம் தாமஸ் வெளியிட்ட அறிக்கையில், விமான விபத்து தொடர்பான விசாரணையின் போக்கும், தகவலும், விபத்துக்கு விமானிகளின் தவறே காரணம் என்பது போல உள்ளது. இந்த அனுமானத்தை ஆரம்பத்திலேயே நாங்கள் நிராகரிக்கிறோம், வெளிப்படையான, நேர்மையான, உண்மையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
விசாரணையில், வெளிப்படைத்தன்மை இல்லை. மிக ரகசியமான முறையில் விசாரிக்கப்படுகிறது. இது, உண்மைத் தன்மை மீதான சந்தேகத்தையும், மக்களிடையே நம்பிக்கையையும் இழக்கும். இந்த விசாரணையில், மிகவும் அனுபவம் வாய்ந்த, தகுதியான, லைன் விமானி ஒருவர் கூட விசாரணைக் குழுவில் இடம்பெறவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.