
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் அருகேயுள்ள ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய இக்கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 260 பேர் பலியாகினர்.
இந்த விபத்தைத் தொடா்ந்து, விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு, ஏஏஐபி விசாரணையைத் தொடங்கி, மேற்கொண்டு வருகிறது. விமானப் பயணிகளின் பாதுகாப்புக்காக உள்துறைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவும் தனது அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் சமா்ப்பிக்கவுள்ளது.
இந்த நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது. அதில் தெரிவித்திருப்பதாவது:
விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டு, இரண்டு என்ஜின்களும் பழுதானதே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் எரிபொருள் சுவிட்சு துண்டிக்கப்பட்டது என விமானி, சக விமானியைக் கேட்டுள்ளார், தான் ஏதும் செய்யவில்லை என்று அவர் பதில் அளித்துள்ளார்.
விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலைக்கு சென்றுள்ளது.
2 என்ஜின்களும் செயலிழக்கும்போது RAT என்ற அமைப்பு மூலம் 2 எரிபொருள் சுவிட்சுகளை கொண்டு விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முயற்சித்த நிலையில், முதல் என்ஜினை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயன்று, லேசாக வெற்றி கண்ட போதும், இரண்டாவது என்ஜின் செயல்படாமல் போனதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வானிலை தொடர்பான பிரச்னைகள் ஏதும் இல்லை என்றும் எரிபொருளில் எவ்வித கலப்படமும் இல்லை என்றும் சதி வேலைகள் காரணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமான விபத்துக்கு பறவைக் காரணமில்லை என்றும் கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே முழுமையான சேதத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.