நேஷனல் ஹெரால்ட் வழக்கு:
குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா?
Published on

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடிக்கும் மேலான மதிப்பு கொண்ட சொத்துகளை சோனியா, ராகுல் உள்ளிட்டோா் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பாக ஜூலை 2-ஆம் தேதிமுதல் தில்லி நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு அந்த நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com