ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
Published on

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் கான்கூ வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் காவல் துறையி அடங்கிய கூட்டுப் படையினா், அங்கு ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில் பயங்கரவாதிகள் யாரும் உயிரிழந்தனரா என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. சம்பவ பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com