
பெங்களூர்: பெங்களூரில் 22 வயது கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, அழுகிய உடலுடன் அதே வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு, குடித்துக்கொண்டு இயல்பாக வாழ்ந்துவந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பெங்களூரில், அக்கம் பக்கத்தினர், ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல்அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து அந்த வீட்டை சோதனைசெய்தபோது, அங்கு இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளது.
அந்தப் பெண் இறந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும், அங்கே உணவுப் பொட்டலங்களும், மது பாட்டில்களும் இருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிவம் என்ற இளைஞர், சுமானா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பெயிண்டர் வேலை செய்து வந்த சிவம், பெங்களூரில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து வாழ்ந்து வந்த நிலையில்தான், சுமானா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்துள்ளது. சுமானா மூக்கில் இருந்து ரத்தம் மட்டும்தான் வந்திருக்கிறது. உடலில் வேறு காயங்கள் இல்லை. அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அவரது உடலுக்கு அருகே மதுபாட்டில்கள், சாப்பிட்டு மீதம் வைத்த உணவுப் பொட்டலங்கள் இருந்துள்ளன.
வியாழக்கிழமை மதியம் காவல்துறையினர் சிவத்தைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திங்கள்கிழமை இரவு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சிவம், சுமானாவை அடித்துள்ளார். பிறகு இருவரும் வேறு வேறு அறையில் உறங்கியிருக்கிறார்கள். காலையில் எழுந்து வந்து, சுமானாவை எழுப்ப முயன்றபோது, அவர் எழவில்லை.
அப்போது, அவரே உணவு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். பிறகு இரவு உணவு வாங்கி வந்து, மது அருந்திவிட்டு, சாப்பிட்டுப் படுத்திருக்கிறார். சுமானாவை எழுப்ப முயன்றிருக்கிறார். முடியவில்லை. புதன்கிழமை காலையும் அவரை எழுப்ப முடியாததால், அவர் இறந்துவிட்டதை அறிந்து, தான்தான் கொலை செய்துவிட்டோம் என்று பயந்து அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.