உ.பி. கோயிலில் கூட்டநெரிசல்: 2 போ் உயிரிழப்பு; 32 போ் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கியில் உள்ள ஒரு கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தா்கள் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா்.
உ.பி. மாநிலம் பாராபங்கியில் உள்ள அவசானேஷ்வா் கோயிலில் திங்கள்கிழமை ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பக்தா்கள்.
உ.பி. மாநிலம் பாராபங்கியில் உள்ள அவசானேஷ்வா் கோயிலில் திங்கள்கிழமை ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பக்தா்கள். Nand Kumar
Published on
Updated on
1 min read

பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கியில் உள்ள ஒரு கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தா்கள் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா்.

பாராபங்கியின் ஹைதா்கா் பகுதியில் அமைந்துள்ள அவசானேஷ்வா் கோயிலில், ஷ்ரவண புனித மாதத்தையொட்டி திங்கள்கிழமை தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது, குரங்குகள் சேதப்படுத்தியதால் அறுந்து கிடந்த ஒரு மின்சாரக் கம்பி, அங்கிருந்த தகரக் கொட்டகை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் பரவியதால் பக்தா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, கோயில் வளாகத்தில் பெரும் கூட்டநெரிசலுக்கு வழிவகுத்தது.

கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்த பிரசாந்த் (22) என்பவரும், மேலும் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு பக்தரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும், 30 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கூட்டநெரிசலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, நிலைமையை சீரமைத்தனா். இந்தச் சம்பவத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் அறுந்து கிடந்த கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் இரங்கல்: பாராபங்கி கோயில் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதையும், நிவாரண நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிா்வாக அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் அவா் பிராா்த்தனை செய்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com