
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது யாத்திரை சென்றவர்களின் பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் உள்ள மோகன்பூர் காவல் எல்லைக்குள்பட்ட சாலை விபத்தில் 5 கன்வாரியா பக்தர்கள் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே அதிகாலை 4.30 மணியளவில் கன்வாரியா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அதிகாரி கூறினார்.
பாபா பைத்யநாத் தாம் கோவிலில் புனித நீரை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் ஷ்ரவாணி மேளாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் கன்வாரியா பக்தர்கள் பலியானதை அந்தத் தொகுதியின் பாஜக எம்பி நிஷிகாந்த் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “எனது மக்களவைத் தொகுதியான தியோகரில் கன்வாரியா பக்தர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாபா பைத்யநாத் ஜி இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை பலியானோரின் குடும்பத்தினருக்கு வழங்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கன்வாரியா யாத்திரைக்காக மொத்தமாக அந்தப் பேருந்தில் 35 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறை மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
காயமடைந்தவர்கள் தேவ்கர் சதார் மருத்துவமனைக்கும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் பலியானவர்களில் உடல் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.