
கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.
கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்திக்கொண்டே, தலைமைக் காவலர் ஒருவர் நடத்திய பேச்சில் கிடைத்த தகவல்தான், கொலைக்குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது என்பது பேசுபொருளாகியிருக்கிறது.
கார் ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கணவரைக் கொலை செய்துவிட்டு, கேரளத்தில் வேறு அடையாளத்துடன் பதுங்கியிருந்த பெண் மற்றும் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த திங்களன்று, தேவநாகரி மாவட்டம் சன்னகிரி நகரில் நடந்த கொலைக் குற்றத்தில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாகக் காவல்துறை அறிவித்தது. அதாவது, நிங்கப்பா என்பவர் கொலை வழக்கில், அவரது மனைவி லட்சுமி (38), காதலர் திபேஷ் நாயக் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் சன்னகிரியைச் சேர்ந்தவர்கள்.
திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் நிங்கப்பா - லட்சுமிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் லட்சுமிக்கு திபேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்த நிங்கப்பாவை கடந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இருவரும் சேர்ந்து கால்வாயில் தள்ளி கொலை செய்திருக்கிறார்கள். 22ஆம் தேதி அவரைக் காணவில்லை என்று லட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜனவரி 30ஆம் தேதி லட்சுமி அவரது தந்தை வீட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறார். அதே நாளில், திபேஷ் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் காணாமல் போனது குறித்து திபேஷ் நண்பர் சந்தோஷிடம் விசாரணை நடத்திய போதுதான், அவர்கள் நிங்கப்பாவைக் கொலை செய்தது தெரிய வந்தது.
ஆனால், லட்சுமியும், திபேஷும் எங்கேச் சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
ஒரு நாள், தலைமைக் காவலர் ரங்கப்பா, தேநீர் கடையில் டீ அருந்திக்கொண்டே, உடன் இருந்த நண்பரிடம் காணாமல் போன லட்சுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது குறித்து சொல்லியிருக்கிறார். அப்போதுதான், அந்த நண்பர், தான் கார் ஓட்டுநராக இருப்பதாகவும், கேரள மாநிலம் கொச்சியில் இவர்களுடன் தான் வேலை செய்ததாகக் கூறி அவர்களது செல்போன் எண்ணையும் கொடுத்திருக்கிறார்.
உடனடியாக காவல்துறையினர் கொச்சி விரைந்து லட்சுமி மற்றும் திபேஷ் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், நிங்கப்பாவை் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதில் சந்தோஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிங்கப்பாவின் எலும்புக்கூடை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.