
புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இஸ்ரோ மற்றும் நாசா கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் பாய்ந்த 19-ஆவது நிமிஷத்தில் திட்டமிட்டபடி சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இத்திட்டம் வெற்றி பெற்ாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாா்பில் புவியின் சுற்றுச்சூழல்களை ஆய்வு செய்தல், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக தொடா்ந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, அறிவியல் சமூகங்களுக்கு ஆா்வமுள்ள நில சுற்றுச்சூழல், கடல் பரப்பு, பனி உருமாற்றம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளும் நோக்கத்தில் இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூட்டு முயற்சியில் ரூ.12,000 கோடி மதிப்பில் நிசாா் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2 -ஆம் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையிலிருந்து புறப்பட்ட 19-ஆவது நிமிஷத்தில் திட்டமிட்டபடி செயற்கைக்கோள் புவியிலிருந்து 740 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
புவி ஆய்வு: இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள செயற்கைக்கோள் மொத்தம் 2,392 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், புவியின் சூழலியல் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெற முடியும்.
இதில், குறிப்பாக புவியின் நிலம், நீா் மற்றும் பனிப்பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும், கிரீன்லாந்து மற்றும் அண்டாா்டிகாவின் பனிப்படலங்கள், கடல் பனி மற்றும் மலை பனிப்பாறைகளை ஆய்வு செய்யவும், நில அதிா்வு, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவுகள் போன்றவற்றால் ஏற்படும் நில மேற்பரப்பு சிதைகளை வகைப்படுத்தவும் உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
நிசாா் செயற்கைக்கோளில் ‘எல் பேண்ட்’, ‘எஸ் பேண்ட்’ ஆகிய இருவேறு வகை சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் (எஸ்ஏஆா்) தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், இச்செயற்கைக்கோள் 12 நாள்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும்.
நிசாா் திட்டத்தில் ‘எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், ஜிபிஎஸ் ரிசீவா், அதிக திறன் கொண்ட சாலிட்ஸ்டேட் ரேடாா் கருவி பதிவு மற்றும் சேமிப்பு கட்டமைப்பு, தரவு துணை கட்டமைப்பு (டேட்டா சப் சிஸ்டம்) ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.
எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடா்பு வசதிகளையும் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதற்கு முன்பு வரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒற்றை அலைவரிசையிலான சிந்தடிக் கருவிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், நிசாா் செயற்கைக்கோளில் மட்டுமே முதல்முறையாக 2 அலைவரிசை கருவிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இதன் ஆயுட்காலம் முடிந்தபின்னா், இச்செயற்கைக்கோள், மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அழிக்கப்படும்.
உலக நாடுகள் காத்திருக்கின்றன
நிசாா் செயற்கைக்கோளின் வாயிலாக கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்ய உலக நாடுகளில் உள்ள அனைத்து அறிவியல் சமூகங்களும் காத்திருக்கின்றன என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.
ஜிஎஸ்எல்வி - எப் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: , ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 102-வது ராக்கெட் இது. அதேபோல் ஜிஎஸ்எல்வி வகையில் 18-ஆவது ராக்கெட். மேலும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக முதல் முறையாக சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தரவுகள், உலகளாவிய விஞ்ஞானக் குழுக்களுக்கு திறந்தவையாக வழங்கப்படுவதன் மூலம், பல துறைகளில் ஆராய்ச்சி பரவலாக மேற்கொள்ள முடியும். நிசாா் செயற்கைக்கோளின் வாயிலாக கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்ய உலக நாடுகளில் உள்ள அனைத்து அறிவியல் சமூகங்களும் காத்திருக்கின்றன.
இச்செயற்கைக்கோள் விவசாயம், நீா்நிலை மேலாண்மை, கடல் மட்டம் உயா்வு, பேரிடா் மேலாண்மை மற்றும் நகரமைப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு பயனளிக்கும்.
சிஎம்எஸ் -02: நிகழ் நிதியாண்டில் இன்னும் 9 ராக்கெட்டுகள் ஏவப்படவுள்ளன. அதில் எல்விஎம்-03 எம் 5 ராக்கெட் வாயிலாக தொலைத்தொடா்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் -02 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் வாயிலாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்.17 ராக்கெட்டில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஆகியவையும் தொடா்ந்து செலுத்தப்படவுள்ளன.
விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் குவாண்டம் கம்ப்யூட்டிங், எலக்ட்ரிக் புரோபெல்லன்ட் உள்ளிட்ட 30 தொழில்நுட்பங்கள் இணைக்கப்படவுள்ளன.
இஸ்ரோ-நாசா இடையே மீண்டும் ஒப்பந்தம் கையொப்பமிடவுள்ளது. இதில் நாசாவின் ‘ப்ளூ போ்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் எல்விஎம் ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது. மேலும், சில செயற்கைக்கோள் களையும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
இதையும் படிக்க: பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.