
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-
மக்களவையில்...
எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனால் கிடைப்பது...
சி.என். அண்ணாதுரை, திமுக (திருவண்ணாமலை): ஆண்டுதோறும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ. 4 கோடியை மட்டுமே வளர்ச்சிப்பணிக்கு பயன்படுத்த முடிகிறது. மீதமுள்ள ஒரு கோடியில் ரூ. 10 லட்சம் நிர்வாக செலவுகளுக்காகவும் மீதமுள்ள ரூ. 90 லட்சத்தை ஜிஎஸ்டி வரியாக மீண்டும் மத்திய அரசே திரும்பப் பெறுகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரு நாடாளுமன்றத்தில் ரூ.4 கோடியைக் கொண்டு எந்தளவுக்கு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவது? தொகுதி நிதியை உயர்த்தினால் கூடுதலாக ஜிஎஸ்டியையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.
சோழர் மரபு இடங்களில் அகழாய்வு செய்க...
ஆர். சுதா, காங்கிரஸ், (மயிலாடுதுறை): கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சமீபத்தில் வருகை தந்த பிரதமர், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்வதாக உறுதியளித்தார். சோழர்கள் உலகை ஆண்டனர். அவர்கள் பயணங்களைத் தொடங்கிய இரண்டு துறைமுகங்களில் குறிப்பிடத்தக்கவை பூம்புகார் மற்றும் செம்பனார்கோயில். அவை மயிலாடுதுறையில் உள்ளன. இரண்டும் சோழ மரபு பற்றிய தகவல்களின் புதையலாக இருப்பதால், அவற்றை அகழாய்வு செய்யுமாறும் இதற்கென ஒரு சிறப்புத் திட்டம் மற்றும் சிறப்புக் குழுவை அறிவித்து சிறப்பு நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
குமரி மீனவர்களைக் காக்க வேண்டும்
விஜய் வசந்த் (காங்கிரஸ்), கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்க கடல் அரிப்புத்தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள் மற்றும் பிற அறிவியல்பூர்வ விரிவான நடவடிக்கைகளுக்குப் போதுமான மற்றும் உடனடி நிதியை ஒதுக்க வேண்டும். குமரி மீனவ கிராமங்களில் சேதமடைந்த சாலை வலையமைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகளை மேலும் அழிவிலிருந்து பாதுகாக்க மறுவாழ்வு வழங்குவது, மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப மீனவ சமூகங்களை ஆதரிக்க நீண்டகால நிலையான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும்.
தஞ்சையில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துக...
எஸ். முரசொலி (திமுக), தஞ்சாவூர்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் எந்தவொரு கோரிக்கைக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம் - ராமேசுவரம், அதிராமபட்டினம்-பேராவூரணி ரயில்களை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லவும் மன்னார்குடி - ஜோத்பூர் ரயிலை நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன். தஞ்சாவூர் - சென்னை, தஞ்சாவூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்.
விவசாயிகளைப் பாதுகாக்க இழப்பீடு வழங்குக...
ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்), திருநெல்வேலி: எனது தொகுதிவாசிகளில் பலரும் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இயற்கைப் பேரிடர்கள், வனவிலங்குகள் போன்றவற்றால் விளை பயிர்கள் சேதமடைவதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர். இதற்கு குறைவான இழப்பீட்டை அரசு வழங்குகிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்குரிய இழப்பீட்டுத்தொகையை உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் பாரத்மாலா திட்டங்கள் எத்தனை?
ஆர். தர்மர் (அதிமுக) கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில்:
தமிழ்நாட்டில், பாரத்மாலா சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 1,476 கி.மீ நீளமுள்ள 45 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மூலதனச் செலவு சுமார் ரூ. 48,172 கோடி. இதில், சுமார் 1,230 கி.மீ. தூரத்துக்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கான திருத்தப்பட்ட காலக்கெடு 2027-28 நிதியாண்டு வரை படிப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, சென்னை - திருப்பதி, திருச்சிராப்பள்ளி-சிதம்பரம், சென்னை துறைமுகம் மேம்பால சாலைத்திட்டம் போன்றவை பாரத்மாலா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேய்ச்சல் சமூகங்களுக்கு பிரத்யேக திட்டங்கள் என்ன?
ஆர். கிரிராஜனுக்கு (திமுக) மத்திய கால்நடை
பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் பதில்: இதற்கென பிரத்யேகத்திட்டம் கிடையாது. ஆனால், மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில் தமிழகம் உட்பட நாட்டில் கால்நடை வளர்ப்பு சமூகத்தின் மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், உள்நாட்டு இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, பசுக்களின் மரபணு மேம்பாடு, பசுக்களின் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்துக்கு ரூ. 191.74 கோடி, தேசிய கால்நடை திட்டத்துக்கு ரூ. 17.02 கோடி, கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு ரூ. 91.47 கோடி, பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்துக்கு ரூ.142.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.